சென்ற இதழின் தொடர்ச்சி...
இனி, உச்சம்பெற்ற சனியால், சனியுடன் இணையும் கேதுவால் திருமணத்தடை எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் காணலாம்.
காலதாமதத் திருமணத்திற்கான பொதுவான காரணங்கள் ஒருவரது ஜாதகத்தில் லக்னம், குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம், களத்திர ஸ்தானமான 7-ஆம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம், 12-ஆம் இடமான அயன, சயன ஸ்தானம் ஆகிய ஐந்து இடங்களையும் லக்னம் மற்றும் ராசியிலிருந்து கவனிக்கப்பட வேண்டும்.
லக்னம்
ஒரு ஜாதகரை வழிநடத்திச்செல்வது லக்னம், லக்னாதிபதி என்பதால் லக்னத்தில் பாவகிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேது போன்ற பாவகிரகங்கள் இடம்பெறாமல் இருத்தல் நல்லது. அவ்வாறு இடம்பெற்றி ருப்பின், அவை தனக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்யும் என்பதால் திருமணத்தை தடைசெய்கின்றன. லக்னத்தில் அசுப கிரகங்கள் இருப்பது களத்திர தோஷத்தை ஏற்படுத்தும் என்பதால், திருமணம் தடைப்படுவதுடன் மனதுக்குப் பிடித்த களத்திரம் அமைவதற்கும் தடையாக இருக்கிறது. லக்னத்தில் மறைவு ஸ்தானாதி பதியான 6, 8, 12-ஆம் பாவாதிபதிகள் அமரக்கூடாது.
இரண்டாம் இடம்
ஒரு ஜாதகத்தில் இரண்டாமிடம் என்பது குடும்ப ஸ்தானமாகும். குடும்ப ஸ்தானத்தில் ராகு- கேது, சனி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் இடம்பெறும்போது, ஏழாம் பார்வையாக மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் பாதிக்கப்படு கின்றன. எனவே காலதாமதமாக திருமணத்தை ஏற்படுத்தும். 2-ஆம் அதிபதி பகை, நீசம், அஸ்தமனம் பெறாமல், மறைவு ஸ்தான சம்பந்தம் பெறாமல், கேந்திர கோணங்களின் சம்பந் தம் பெறுவது நல்லது. 2-ஆம் இடத்தில் உச்சம்பெற்ற கிரகங்கள் இல்லாமலிருப்பது மிக மிக நல்லது.
ஏழாம் இடம்
ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது தனது வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் இடமாகும். ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் சம்பந்தம் பெறாமலிருத்தல் நல்லது. ஏழாம் அதிபதி, ஆறு, எட்டு, பன்னிரண்டு போன்ற மறை விட ஸ்தானத்திற்கு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். மறைவிட ஸ்தானாதி பதிகள் ஏழாமிடத்தில் அமராமலும் இருக்க வேண்டும். அதேபோல ஏழாமிடத்து அதிபதிகள் மறைவிட ஸ்தானாதிபதியுடன் சேராமல் இருக்கவேண்டும்.
ஏழாமிடத்தில் எந்த கிரகங்களும் இடம் பெறாமல் இருப்பதே சிறப்பு. ஏழாமிடத்தில் சனி, ராகு- கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் இடம்பெற்றிருப்பின் திருமணம் காலதாமதமாகிக்கொண்டே செல்லும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏழாம் பார்வையால் அவை லக்னத்தையும் பாதிப்படையச் செய்துவிடுகிறது. ஏழாமிடத் தில் வக்ர கிரகங்களான ராகு, கேதுவுடன் அசுபகிரகங்களான சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் வக்ரம் பெற்று நின்றால், எத்தனை தாரம் வந்தாலும் நிலைக்காது.
எட்டாம் இடம்
எட்டாம் இடம் மாங்கல்ய ஸ்தானம் எனப் படும். எனவே இந்த ஸ்தானத்தில் பாவகிர கங்கள் அமர்ந்திருப்பின், அவை ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் காலதாமதத் திருமணத் தைத் தரும்.
பன்னிரண்டாம் இடம்
12-ஆமிடம் என்பது அயன, சயன, போக ஸ்தானம். இதில் அசுபகிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் அமர்வது இல்வாழ்க்கை இன்பத்தைக் கெடுக்கும். நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருக்கவேண்டும். 12-ஆம் இடத்தில் அமரும் செவ்வாய் 8-ஆம் பார்வையால் 7-ஆமிட மான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன், மனைவி அன்பு குறையும்.
உதாரண ஜாதகம்-1
முழுமையான கர்மவினைப் பதிவிற்கு உதாரணமாக இந்த ஜாதகத்தைக் கூறலாம்.
லக்னாதிபதி செவ்வாய் 8-ல் மறைந்து பலமிழந்தது. 5-ஆம் அதிபதி குரு லக்னத்தில் இருந்து, வக்ரம் அடைந்து, சனி சாரம் பெற்று சனியை நோக்கிச் சென்றதால், பூர்வபுண்ணியம் கெட்டு, பிறந்தவுடன் பூர்வீகசொத்தை இழந்து, இன்றுவரை அடிமைத்தொழிலில் கஷ்ட ஜீவனம். 9-ஆம் அதிபதி சந்திரன் 5-ல். பாதகாதிபதி சந்திரன் 5-ல். இந்த ஜாதகர் பிறந்தது சப்தமி திதி. சூன்யம் அடையும் கிரகம் குருவும் சந்திரனும் என்பதால், பாக்கிய ஸ்தானமும் பலம் குறைந்தது. சந்திரன் சனி சாரம் பெற்றதால் புனர்பூ தோஷம் 5, 9-ஆம் பாவக வலிமையை மேலும் குறைத்தது. லக்னத்திற்கு 12-ல் நின்ற உச்சம்பெற்ற சனியின் 3-ஆம் பார்வை கேதுவிற்கு ஏற்பட்டதால், சனி- கேது இணைவு 2-ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தின் இயக்கத்தை தடைசெய்தது. 7-ஆம் அதிபதி மற்றும களத்திரகாரகன் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது. கர்மகாரகன் சனிக்கு திரிகோணத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என அனைத்து (சுக்கிரனைத் தவிர) கிரகங்களும் உச்சம் பெற்ற சனியின் கட்டுப்பாட்டில் இருந்தமையால், 36 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. வாழ்வில் எந்த முன்னேற் றமும் இல்லை.
உதாரண ஜாதகம்-2
லக்னாதிபதி, களத்திரகாரகன் சுக்கி ரனுக்கு சனியின் 10-ஆம் பார்வை. 34 வயதான இந்த ஜாதகருக்கு காலபுருஷ 7-ஆம் இடத்தில் சனி- கேது இணைவே திருமணத்தடைக்கு மிகமுக்கியமான காரணம். குருவுக்கும் சுக்கிரனுக்கும் சம சப்தமப் பார்வை இருப்ப தால், இந்த ஜாதகருக்கு குரு தசையில் சுக்கிர புக்தியில் 26-8-2019-க்குள் திருமணம் நடக்கும்.
கர்மகாரகன் சனிபகவான் யாரிடமும் நட்பு பாராட்டமாட்டார். புதன், சுக்கிரன் நட்பு கிரகமாக இருந்தால்கூட, கர்மக் கணக்கை நேர்செய்யும்போது எந்த தயவும் காட்ட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் சனி பகவானுக்கு புதன், சுக்கிரன் நட்பு கிரகம் என்பதால், நட்பு வீட்டில் இருக்கும்போதும் சனி, ராகு சாரம் பெறும் வலிமை மிகுதியாக இருக்கும்.
உதாரண ஜாதகம்-3
இந்த ஜாதகத்தில் புதன் வீட்டில் சனி, கேது. 7-ஆம் அதிபதி புதன் வக்ரம். 7-ல் நின்ற சனி வக்ரம். திருமணமே நடக்காது. நடந்தாலும் மனைவி இவருடன் வாழவிரும்ப மாட்டார். லக்னத்திற்கு 7-ல் இரண்டு வக்ர கிரகம். 46 வயதாகியும் வெளியுலகிற்கு தன் திரைமறைவு வாழ்வைச் சொல்லமுடியாத நிலை. சனிக்கு திரிகோணத்தில் சூரியன், புதன், குரு. சனியின் பார்வையில் சந்திரன், ராகு. சனி வக்ரம் பெற்றதால் செவ்வாயை நோக்கிச் செல்கிறது. சுக்கிரன் பாவகர்த்தரியில் சிக்கியுள்ளது. அனைத்து கிரகங்களும் சனியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடும் வரை சனி, ராகு- கேதுக்கள் தமது பிடியைத் தளர்த்தமாட்டார்கள். அசுப கிரகமான சனி உச்சம்பெறுவது தலைக்குமேல் தொங்கும் கத்தி. பலர் சனி உச்சம்பெறும்போது குழந்தை பிறப்பது யோகம் என்றே நினைக் கிறார்கள். சனி என்பது முன்னோர்களின் பாவத்தொடர்ச்சி என்பது நிதர்சனமான உண்மை.
அசுப கிரகமான சனி நேர்வலுப்பெற்றால் உடலை கடுமையாக வருத்திப்பிழைக்க வேண்டியிருக்கும். அவர் வலிமையிழந்தால் உடலால் உழைக்கத் தேவையில்லாத சொகுசு வாழ்க்கை கிடைக்கும். ஆயுளைத் தவிர்த்து, மனிதனுக்கு கெடுதல் செய்பவையான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமை வேலை, உடலுழைப்பை மட்டுமே நம்பிப் பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலையை உச்ச சனி பெற்றுத்தருவார். அசுப கிரகங்கள் நேர் வலுப்பெறாமல் சூட்சும வலுப்பெறுவதே சிறப்பு.
பரிகாரம்
பழைய நிலையில், கவனிப்பாரின்றி இருக்கும் கோவிலிலுள்ள விநாயகரை சங்குபுஷ்பம் வைத்து வழிபடவும். சனி, ராகு- கேது சாரம் பெற்றிருப்பின், நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலுள்ள விநாயகரை வணங்கவேண்டும். இடுப்பில் சர்ப்பம் அணிந்த நிலையிலிருக்கும் விநாயகரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமை காலை வேளையில் அறுகம்புல் வைத்து வழிபாடுசெய்ய வேண்டும். சனி, கேது என்றால் ஆஞ்சனேயர் வாலைத்தான் குறிக்கும். ஆஞ்சனேயர் வாலில் பொட்டு வைத்து வணங்க வேண்டும். கேது என்றால் காவி நிறம். எனவே ஆஞ்சனேயருக்கு செந்தூரம் பூசவேண்டும்.
சனிக்கிழமைதோறும் ஸ்ரீமத் ராமாயணத் தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்துவர வேண்டும். ராம நாமம் ஜெபிப்பது மிகச்சிறப் பான பலனைத் தரும்.
அந்நிய மொழி, அந்நிய மதம், அந்நிய மனிதர்களால் லாபம் அடையக்கூடிய கிரகச்சேர்க்கை என்பதால், இக்கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் வெளியூர், வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால் தீயபலன் குறைந்து சிறப்பாக வாழமுடியும். தற்போது கோட்சாரத்தில் சனி, கேதுவுடன் இணைவு பெற்றிருப்பதால், பிறக்கும் குழந்தையின் ஜாதகப் பலனறிந்து தத்துக்கொடுத்து வாங்கலாம்.
செல்: 98652 20406
அட்ச திரிதியையில் ஐஸ்வர்யம் தரும் லக்ஷ்மி குபேரர் மகா யாகம்!
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 7-5-2019 செவ்வாய்க்கிழமை அட்சய திரிதியையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஐஸ்வர்யம் தரும் லக்ஷ்மி குபேரர் மகாயாகம், ஷோடச தானத்துடன் ஸ்ரீலக்ஷ்மி குபேரருக்கு ஷோடஷ திரவிய அபிஷேகம் நடைபெறுகிறது.
சித்திரை மாத வளர்பிறை திரிதியை திதி "அட்சய திரிதியை' எனப்படுகிறது. "அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அந்த நாளில் நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவதுதான் மிகவும் சிறப்பு. அதனால் அட்சய திரிதியை அள்ள அள்ளக் குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளித்தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என என்ன வாங்கினாலும் மேன்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாகத் தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தைத் தரும்.
இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பல தலைமுறைக்குமுன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும்.
இனிப்புப் பொருள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இன்னும் இதுபோன்ற பல நற்பலன்களை வழங்கும் இந்த நாளில் நடக்கும் யாகத்தில் பங்குபெற்று எல்லா வளங்களும்பெற பிரார்த்திக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
Email : [email protected]